Thursday, January 28, 2010

வசூலில் டைட்டானிக்கை 'மூழ்கடித்த' அவதார்!!

டைட்டானிக் திரைப்படத்தின் 12 ஆண்டுகால வசூல் சாதனையை 6 வாரங்களில் முறியடித்துள்ளது ஜேம்ஸ் கேமரூனின் அவதார்.

1997-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் வெளியான படம் டைட்டானிக். உலகக் காதலர்களின் ஒப்பற்ற திரைக்காவியமாகப் பார்க்கப்பட்ட இந்தப் படம் வசூலிலும் விருதுக் குவிப்பிலும் இணையற்ற சாதனைகளைப் படைத்தது.

1,843.2 மில்லியன் (1.8432 பில்லியன்) டாலர்களைக் குவித்து வசூலில் உலகிலேயே நம்பர் ஒன் படமாகத் திகழ்ந்தது. 11 ஆஸ்கர் விருதுகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளையும் வென்றது டைட்டானிக்.

இந்த 12 ஆண்டுகளில் டைட்டானிக்கின் வசூல் சாதனையை வேறு எந்தப் படத்தாலும் முறியடிக்க முடியாமல் இருந்தது. அந்த சாதனையை மீண்டும் ஜேம்ஸ் கேமரூனே இப்போது முறியடித்துள்ளார்.

அவரது அவதார் திரைப்படம் கடந்த டிசம்பர் 18-ம் தேதி உலகமெங்கும் வெளியானது. திரைப்பட வரலாற்றையே புரட்டிப் போட்டுள்ளது இந்தப் படத்தின் வசூல் சாதனை. இந்தியா உள்பட திரையிட்ட நாடுகளிலெல்லாம் இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் படம் நிச்சயம் டைட்டானிக் வசூலை மிஞ்சிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இத்தனை சீக்கிரம் அந்த சாதனை நிகழும் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

வெளியான 6 வாரங்களுக்குள் டைட்டானிக் 12 ஆண்டு வசூல் சாதனையை முறியடித்துள்ளது அவதார்.

6 வது வார நிலவரப்படி, அவதார் பெற்றுள்ள வசூல் 1,858.6 மில்லியன் டாலர்கள் (1.8586 பில்லியன் டாலர்).

விருதுகளை வெல்வதிலும் டைட்டானிக்கை இந்தப் படம் மிஞ்சி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே ஆஸ்கருக்கு அடுத்த நிலையில் உள்ள கோல்டன் குளோப் விருதுகளில் சிறந்த படம், சிறந்த இயக்குநர் விருதுகளை வென்றுள்ள அவதார், 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Source:thatstamil.in

No comments:

Post a Comment