Friday, January 1, 2010

பூமியை நோக்கி வரும் விண் கல்- தடுக்க முயலும் ரஷ்யா!

மாஸ்கோ: மிகப் பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டுள்ளது. இதைத் தடுத்து பூமியைக் காப்பாற்ற ரஷ்யா முயற்சி மேற்கொண்டுள்ளது.

விண்வெளியில் விண்கற்கள் கோடிக்கணக்கில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் எப்போதாவது சில புவயீர்ப்பு வளையத்திற்குள் வரும்போது பூமியை நோக்கி பாய்ந்து வரும். இந்தக் கற்கள் வரும் வேகத்திலேயே எரிந்து சாம்பலாகி விடும். சில பெரிய கற்கள் மட்டும் தப்பிப் பிழைத்து பூமியில் வந்து விழும்.

இவை விழுந்த இடத்தில் கல்லின் சைசுக்கேற்ப பள்ளம் ஏற்படுவது உண்டு. அந்த வகையில் தற்போது மிகப் பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டுள்ளது. இந்த விண்கல்லுக்கு அபோஃபிஸ் (Apophis) என்று பெயரிட்டுள்ளனர்.

அபோஃபிஸ் விண்கல், 2029ம் ஆண்டுவாக்கில் பூமியிலிருந்து 30,000 கிலோமீட்டர் தொலைவுக்கு நெருங்கி வரும். அதற்கு அடுத்த 7 ஆண்டுகளில் அதாவது 2036ம் ஆண்டு அது புவிவட்டப் பாதைக்குள் நுழைய வாய்ப்புள்ளதாம். இது நடந்தால் அந்தக் கல் பூமியின் மீது வந்து விழ வாய்ப்பு மிக அதிகம்.

அபோஃபிஸ் விண்கல்லின் சுற்றளவு 350 மீட்டர் அதாவது 1150 அடி என்று தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கல் 1,000,000 டன் எடை கொண்டதாக இருக்கலாம் என்கிறார்கள்.

இது பூமியின் மீது விழுந்தால், அந்த இடத்தில் பிரான்ஸ் நாட்டின் சைசுக்கு மிகப் பெரிய பள்ளம் ஏற்படும். பல அணு குண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்தால் ஏற்பட்டால் ஏற்படும் அளவுக்கு மாபெரும் சேதம் ஏற்படும்.

இந்தக் கல் கடலில் விழுந்தால் நாம் இதுவரை கேள்விப்பட்டிராத அளவுக்கு சுனாமி அலைகள் ஏற்பட்டு மனித குலத்துக்கு பெரும் உயிர்ச் சேதம் ஏற்படும்.

எனவே இந்த விண் கல்லை பூமியில் விழாமல் தடுக்க அமெரிக்கா உள்ளிட்ட பெரிய நாடுகளுடன் இணைந்து ரஷ்ய விஞ்ஞானிகள் முயற்சிகளில் இறங்கியுள்ளனராம்.

விரைவில் இதுதொடர்பாக ரஷ்ய விஞ்ஞானிகளின் மிகப் பெரிய கூட்டம் கூடவுள்ளது. இதுகுறித்து ரஷ்ய விண்வெளிக் கழகத்தின் தலைவரான அனடோலி பெர்மினோவ் கூறுகையில், விரைவில் எங்களது கழகத்தின் கூட்டம் நடைபெறவுள்ளது. கல் பூமியின் மீது விழாமல் தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், இந்தக் கல் பூமியின் மீது வந்து விழுந்தால் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகும். பல ஆயிரக்கணக்கான ஊர்கள் சாம்பலாகி விடும்.

இது வந்து விழும் வரை காத்திருக்காமல், அதைத் தடுக்கும் வகையிலான பாதுகாப்பு நடைமுறைகளை சில கோடிகளை செலவழித்து மேற்கொள்வது நல்லது என நாங்கள் கருதுகிறோம். வரும் முன் காத்து்க கொள்ளும் அடிப்படையே இது.

விரைவில் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றின் விண்வெளி நிபுணர்களுடன் இணைந்து ஒரு ஆய்வுக் கூட்டம் நடக்கவுள்ளது. பூமிக்கு ஏற்படவுள்ள இந்தப் பேரழிவை எப்படி சமாளிப்பது என்பது குறித்து இதில் ஆராயப்படும்.

இந்தக் கல் பூமியில் வந்து விழாமல் தடுக்கும் வகையில் ஒரு பிரமாண்ட ராக்கெட்டை அனுப்பி அதை சிதறடிப்பது அல்லது திசை திருப்புவது, அல்லது அந்தக் கல்லுக்குள் வெடி பொருட்களை புதைத்து வெடிக்கச் செய்வது என பல யோசனைகள் கூறப்படுகின்றன என்கிறார் அனடோலி.

இதுகுறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கூறுகையில், இந்த விண்கல் பூமியின் மீது விழும்போது மிகப் பெரிய அளவுக்கு நாசம் ஏற்படும். எங்களுடைய கணக்குப்படி 2036ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி இந்த விண்கல் பூமியைத் தாக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் பூமியை எரிகல் தாக்கினால் என்ற கற்பனையின் அடிப்படையில் Armageddon என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியானது.

மைக்கேல் பே இயக்கிய அந்தப் படத்தில் பூமியைக் காக்க புரூஸ் வில்லிஸ் தலைமையில் ஒரு 'டிரில்லர்'கள் குழு எரிகல்லில் தரையிறங்கி அணு குண்டு வைத்து அதை இரண்டாக உடைத்து பூமி மீது மோதால் திசை திருப்பும்.

கிட்டத்தட்ட இந்தக் கதை உண்மையாகிவிடும் போலியிருக்கிறது!

Source:thatstamil.in

No comments:

Post a Comment