Thursday, January 28, 2010

மீண்டும் வேலைக்கு ஆள் சேர்க்கும் சத்யம்!

மும்பை: மகிந்திரா சத்யம் நிறுவனம் 2000 புதிய பணியாளர்களை பணி நியமனம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. புதியவர்கள் மற்றும் அனுபவமிக்கவர்களின் கலவையாக இந்த நியமனம் அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வேலைக்குறைப்புக்கு வழிபார்த்துக் கொண்டிருந்த மகிந்திரா சத்யம் இப்போது புதிய ஆட்களை நியமிப்பது குறித்துப் பேசத் துவங்கிவிட்டது. காரணம், மீட்சிப் பாதையில் செல்லத் துவங்கியுள்ளதாம் இந்த நிறுவனம்.

"நிலைமை முன்பு போல மோசமாக இல்லை. வர்த்தகம் நல்ல நிலைக்குத் திரும்பத் துவங்கிவிட்டது. எதிர்காலம் தெளிவாகத் தெரிகிறது. எனவே இப்போது வருகிற வேலைக்கான ஆர்டர்களைச் சமாளிக்க புதிய பணியாளர் நியமனம் அவசியம். இதை இனியும் தள்ளிப் போடாமல் இப்போதே பணி நியமனங்களைச் செய்யப் போகிறோம்" என்கிறார் மகிந்திரா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர்.

அடுத்த நிதியாண்டிலிருந்து கேம்பஸ் இன்டர்வியூவையும் மீண்டும் தொடங்கப் போவதாக சத்யம் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே 2008ம் ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பலரை தேர்வு செய்தது சத்யம் நிறுவனம். ஆனால் நிதி நெருக்கடி காரணமாக, தாங்கள் அளித்த வேலைவாய்ப்புக் கடிதங்களை அப்படியே விட்டுவிட்டது. இவர்களுக்கு மீண்டும் பணிநியமனம் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் அந்த உயர் அதிகாரி.

இந்நிலையில் சமீபத்தில் 6000 மாணவர்களுக்கு தேர்வு வைத்து, அவர்களில் 3000 பேரைத் தேர்வு செய்து வைத்துள்ளது சத்யம். இவர்களை 50 பேர் கொண்ட குழுக்களாக தேர்வு எழுத வைத்து, தேவையானவர்களை இறுதிப் பட்டியலில் இடம் பெறச் செய்யும் திட்டம் உள்ளதாம்.

Source:thatstamil.in

No comments:

Post a Comment