Thursday, January 28, 2010

ராஜபக்சேவை குடும்பத்துடன் கொல்லத் திட்டமிட்டிருந்தார் பொன்சேகா-இலங்கை அரசு பரபரப்பு புகார்

கொழும்பு: ராஜபக்சேவையும், அவரது குடும்பத்தினரையும் கூண்டோடு படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தார் சரத் பொன்சேகா என்று இங்கை பாதுகாப்பு அமைச்சகம் பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வரும் அரசின் தேசிய பாதுகாப்புக்கான மீடியா மையத்தின் இயக்குநர் லட்சுமண் ஹலுகலே இன்று மாலை செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், அதிபரையும், அவரது குடும்பத்தினரையும் கூண்டோடு தீர்த்துக் கட்ட முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி பொன்சேகா திட்டமிட்டிருந்தார். இந்த சதித் திட்டத்தை கொழும்பில் உள்ள இரண்டு ஹோட்டல்களில் வைத்துத் தீட்டியுள்ளனர். இதுதொடர்பான ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன.

கோட்டையில் உள்ள, லேக் ஹவுஸ் சந்திப்பு அல்லது கொழும்பு காலே சாலை ஆகியவற்றில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து அதிபரைக் கொல்ல திட்டம் தீட்டப்பட்டிருந்தது.

இந்த சதித் திட்டத்தில் ராணுவத்தை விட்டு ஓடிப் போன 9 அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. இவர்களைத்தான் நேற்று ராணுவத்தினர், பொன்சேகா தங்கியிருந்த ஹோட்டலில் வைத்துக் கைது செய்தனர்.

இந்த பயங்கர சதித் திட்டம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரும் கைது செய்யப்படுவர் என்றார் ஹலுகலே.

ராஜபக்சே தன்னைக் கொலை செய்ய உத்தரவிட்டுள்ளதாக நேற்று காலையில்தான பொன்சேகா கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று மாலை, பொன்சேகாதான், ராஜபக்சேவை கூண்டோடு கொல்லத் திட்டமிட்டிருந்ததாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்து என்ன நடக்குமோ என்ற பேரச்சம் இப்போது இலங்கையை படு வேகமாக சூழ்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

விரைவில் இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு?:

இந் நிலையில் விரைவில் நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் ராஜபக்சே உத்தரவிடுவார் என்று இலங்கை அமைச்சர் மைத்ரிபாலா சிறீசேனா தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ள சூட்டோடு, நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தி எதிர்க்கட்சிகளை கூண்டோடு காலி செய்து விடும் முகமாகவே நாடாளுமன்றத்தை விரைவில் கலைக்க ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து அமைச்சர் சிறீசேனா கூறுகையில், விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும். இதுதொடர்பான அறிவிப்பை அதிபர் விரைவில் வெளியிடுவார். தேர்தல் தேதி குறித்து இப்போது முடிவாகவில்லை என்றார்.

நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியும் தயாராகி விட்டது. இதுகுறித்து கூட்டணியின் பொதுச் செயலாளரான சுசில் பிரேமஜெயந்தா கூறுகையில், கட்சியின் சார்பிலான வேட்பு மனுக்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த சில வாரங்களில் இந்தப் பணிகள் முடிவடையும் என்றார்.

சுற்றுச்சூழல்துறை அமைச்சர் படாலி ரணவக்க கூறுகையில், நாடாளுமன்றத்தின் ஆயுள்காலம் நீட்டிக்கப்பட மாட்டாது. அப்படி ஒரு திட்டம் அரசிடம் இல்லை என்றார்.

நாடாளுமன்றத்தின் ஆயுள்காலம் ஏப்ரலுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான நடைமுறைகளை அரசு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Source:thatstamil.in

No comments:

Post a Comment