Friday, January 1, 2010

சென்னைக்கு போகிறார்களே-ரோசய்யா கவலை

ஹைதராபாத்: தெலுங்கானா பிரச்சினையால் பல சினிமா தயாரிப்பாளர்கள் ஆந்திராவை விட்டு தமிழகத்தின் சென்னைக்கு இடம் மாறப் போவதாக தெரிய வந்துள்ளது என்று ஆந்திர முதல்வர் ரோசய்யா கவலை தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா போராட்டம் மிகத் தீவிரமாகிவிட்டதால், தெலுங்குப் படவுலகமும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. கலவரக்காரர்கள் தொடர்ந்து சினிமாத் துறையினரை குறிவைத்து தாக்கி வருகிறார்கள். தெலுங்கானா பகுதியில் முன்னணி நடிகர்களின் படங்களை ஓடவிடாமல் செய்து வருகின்றனர்.

மோகன்பாபு, அவரது மகன்கள், சிரஞ்சீவி, அவர் மகன் ராம்சரண், மருமகன் அல்லு அர்விந்த், கிருஷ்ணாவின் மகன் மகேஷ் பாபு ஆகியோர் படங்களைத் திரையிடவும், படப்பிடிப்புகள் நடத்தவும் முடியாத நிலை உள்ளது தெலுங்கானா பகுதியில். ஆந்திர திரைப்படத் துறையின் தலைமை இடம் ஹைதராபாத், தெலுங்கானா பகுதியில் அமைந்திருப்பதால், தெலுங்கானாவை ஆதரிக்காத நடிகர்கள் அங்கு குடியிருக்கக் கூடாது என போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.

இருதினங்களுக்கு முன் சிரஞ்சீவி மைத்துனரின் கீதா ஆர்ட்ஸ் கட்டடம் தாக்கப்பட்டது. ராமோஜிராவ் பிலிம் சிட்டியும் மூடப்பட்டுவிட்டது.

எனவே வேறு வழியின்று, தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த முன்னணி தயாரிப்பாளர்கள் சென்னையை நோக்கி வரத் துவங்கிவிட்டனர். பல தெலுங்குப் படங்களின் படப்பிடிப்புகள், சத்தமில்லாமல் தமிழகப் பகுதிகளில் நடந்து வருவது குறிப்பிடத் தக்கது.

இதையெல்லாம் கருத்தில் கொண்ட ஆந்திர முதல்வர் ரோசய்யா, தெலுங்கானா போராட்டத்தால் ஆந்திரா பெரும் இழப்பைச் சந்தித்துக் கொண்டிருப்பதாக கவலையுடன் தெரிவித்தார், நிருபர்களிடம்.

மேலும் அவர் கூறுகையில், "ஹைதராபாத் என்ற சர்வதேச தரம் மிக்க தொழில் நகரத்தின் இமேஜே சுத்தமாக அடிவாங்கிவிட்டது.

தொடர்ந்து தங்கள் மீது தாக்குதல் நடந்ததால், எங்கிருந்து தெலுங்கு சினிமா ஹைதராபாத்துக்கு வந்ததோ, அதே இடத்துக்கு (சென்னைக்கு) சென்றுவிடும் நிலை உருவாகிவிட்டது. அவர்களைத் தடுக்கவும் வழியில்லை. தொழில் துறையிலும் இதே அறிகுறிகள் உள்ளன. தெலுங்கானா போராட்டக்காரர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.." என்றார்.

Source:thatstamil.in

No comments:

Post a Comment