Thursday, December 31, 2009

சந்திர கிரகணத்தில் பிறக்கிறது புத்தாண்டு

சென்னை: நாளை ஆங்கில புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு நேரத்திலேயே சந்திர கிரகணமும் ஏற்பட உள்ளது.

இது குறித்து சென்னை பிர்லா கோளரங்க இயக்குநர் அய்யம் பெருமாள் கூறுகையி்ல்,

31ம் தேதி நள்ளிரவு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. 12.21 மணி முதல் 1.24 வரை சந்திரகிரகணம் நடக்கிறது. சென்னையில் 80 சதவீதம் இந்த சந்திர கிரகணத்தை பார்க்க முடியும்.

சாதாரண கண் கொண்டே இதனை பார்க்கலாம். எனினும் கிரகணத்தை துல்லியமாக காண அதற்குரிய கண்ணாடி அவசியம். இதற்கான ஏற்பாடுகள் பிர்லா கோளரங்கில் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல ஜனவரி 15ம் தேதி கங்கண சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரியனின் மையப்பகுதி இருளாகவும் சுற்றி ஒளிவட்டம் தோன்றுவதும் கங்கண சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.108 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கிரகணம் உண்டாகிறது.

கன்னியாகுமரியில் இதை முழு அளவில் காணலாம். சென்னையிலும் 80 சதவீதம் இந்த கிரகணத்தை காணலாம். ஆனால் சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க கூடாது. இதற்காக 10,000 சிறப்பு கண்ணாடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இது போன்ற சூரிய கிரகணம் 1872ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி 1901 நவம்பர் மாதம் 11ம் தேதியும் உண்டானது. அதன் பிறகு தற்போது தான் நிகழ உள்ளது. இதன் பிறகு மீண்டும் 2019ம் ஆண்டில்தான் நிகழும் என்றார்.

புத்தாண்டு பிறக்கும் சயமத்தில் நள்ளிரவு பார்டிகள், கும்மாளம் ஒரு பக்கம் நடந்தாலும் கோயில்களில் விசேஷ பூஜைகளும் நடைபெறுவது வழக்கம்.

ஆனால், இம்முறை அதே நேரத்தில் சந்திர கிரகணம் ஏற்படுவதால் கோயில்கள் மூடப்பட்டிருக்கும்.

புத்தாண்டும், சந்திரகிரகணமும் ஒன்றாக வருவது இனி 2028ம் ஆண்டிலும், 2066ம் ஆண்டிலும் தான் நடக்கும். ஆனால், சந்திர கிரகணம் பற்றிய தகவல் தெரிந்த 1901ம் ஆண்டில் இருந்து இதுவரை புத்தாண்டு தினத்தில் ஏற்பட்டதில்லை என்று வானவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Source:thatstamil.in

No comments:

Post a Comment