Thursday, December 31, 2009

தெலுங்கானா பந்த்-165 ரயில்கள்-9000 பஸ்கள் ரத்து

ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கக் கோரி தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக் குழு விடுத்துள்ள அழைப்பை ஏற்று இன்று தெலுங்கானாவில் பந்த் நடந்து வருகிறது. இதன் காரணமாக 165 ரயில்கள், 9000 பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹைதராபாத் மற்றும் தெலுங்கானா பகுதி ஸ்தம்பித்துள்ளது.
இன்று காலை பந்த் தொடங்கியபோதிலும் கூட நேற்று இரவிலிருந்தே பந்த் சூழ்நிலை ஆரம்பமாகி விட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவிலிருந்தே தெலுங்கானா பிராந்தியம் முழுவதும் ஆந்திர மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதேபோல ரயில்களும் கூட நிறுத்தப்பட்டு விட்டன.

மொத்தம் 165 ரயில்களும், 9000 பஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ஹைதராபாத் உள்ளிட்ட தெலுங்கானா முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா பகுதியில் எந்த பஸ்சும் ஓடவில்லை. அதேபோல விஜயவாடா நோக்கிச் செல்லும் பஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பஸ்களும், ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கிட்டத்தட்ட 30 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ. 4 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட டவுன் பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். ஏராளமானோர் தங்களது இருப்பிடங்களுக்குப் போக முடியாமல் தவித்துக் கொண்டுள்ளனர்.

தனியார் வாகனங்களும், ஆட்டோக்களும் மக்களிடம் பெரும் பணத்தைப் பறித்துக் கொண்டு அவர்களை ஏற்றிச் செல்கின்றன.

ஹைதராபாத் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல தெலுங்கானா முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். துணை ராணுவப் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். ஹைதராபாத் மற்றும் தெலுங்கானா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை தெலுங்கானா விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க காங்கிரஸ், தெலுங்கு தேசம் [^], பாஜக, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி [^], பல்வேறு தெலுங்கானா அமைப்புகள், மாணவர் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு கூடி விவாதிக்கவுள்ளது.

கமிட்டி அமைக்க மன்மோகன், சோனியா முடிவு...

இதற்கிடையே, நேற்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி [^] உள்ளிட்டோர் அடங்கிய காங்கிரஸ் முக்கியக் குழுக் கூட்டம் நடந்தது. இதில் தெலுங்கானா விவகாரத்தை ஆராய கமிட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

ராவ் நிராகரிப்பு...

ஆனால் கமிட்டி அமைத்தால் அதை ஏற்க மாட்டோம் என சந்திரசேகர ராவ் [^] கூறி விட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மத்திய அரசு எங்களுடன் நேரடியாகப் பேச வேண்டும். அதற்கு நாங்களும் தயாராகவே இருக்கிறோம். கோரிக்கை குறித்து மத்திய அரசே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி தனி மாநிலம் குறித்த இறுதியான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

ஆனால், இதுதொடர்பாக கமிட்டி எதையாவது அமைத்தால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம். கமிட்டியுடன் பேச நாங்கள் தயாராக இல்லை. இது நேரத்தை வீணடிக்கும் செயல். இதனால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.

தெலுங்கானா மக்களின் பொறுமையை இனிமேலும் சோதித்துப் பார்க்க முயற்சிக்கக் கூடாது. எங்களுடன் பேச டெல்லி தயாராக இருந்தால் நாங்களும் தயார்தான். கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா தரப்பையும் பேச்சுவார்த்தைக்கு தாராளமாக அழைக்கலாம். அந்த அளவுக்குத்தான் எங்களது பொறுமை உள்ளது.

எங்களிடம் போதுமான அறிவுஜீவிகள், நிபுணர்கள் உள்ளனர். இதுகுறித்து இன்றைய கூட்டு நடவடிக்கைக் குழுவில் விவாதித்து பிரதிநிதிகளையும் அறிவிக்கவுள்ளோம் என்றார் ராவ்.

தெலுங்கானா: அனைத்துக் கட்சிக் கூட்டம்:

இந் நிலையில் தெலுங்கானா விவகாரம் தொடர்பாக படு லேட்டாக புத்தி வந்துள்ள மத்திய அரசு, அனைத்துக் கட்சிகளையும் அழைத்து இதுகுறித்து விவாதிக்க தீர்மானித்துள்ளது.

முதலிலேயே அனைத்துக் கட்சிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, ஆலோசனைகளைக் கேட்டு அதன் பிறகு தெலுங்கானா தனி மாநிலம் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடாமல் தான் தோன்றித்தனமாகவும், அரை வேக்காட்டுத்தனமாகவும் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என நள்ளிரவில் அறிவித்து ஆந்திராவை இரு துண்டுகளாக்கி அந்த மாநிலத்தையே முடக்கி விட்டது.

தற்போது இந்த விவகாரத்தை எப்படி முடிப்பது என்று தெரியாமல் தட்டுத் தடுமாறி வருகிறது மத்திய அரசு. இந்த நிலையில் பேசாமல் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம். இந்த வார இறுதியில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

Source:thatstamil.in

No comments:

Post a Comment