Wednesday, December 30, 2009

கருணாநிதியை மதிக்காத காங்.!

சென்னை: இந்தியாவின் மூத்த பெரும் தலைவரான முதல்வர் கருணாநிதியை காங்கிரஸ் கட்சி சுத்தமாக ஒதுக்கத் தொடங்கி விட்டது என்பதை சமீப கால நிகழ்வுகள் தெள்ளத் தெளிவாக காட்டி வருகின்றன. இது முதல்வர் கருணாநிதிக்கும் புரியும், இருப்பினும் தனக்கே உரிய சாணக்கியத்தனத்துடன் அவர் அசாதாரண அமைதியை கடைப்பிடித்து வருவதாக திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

முதல்வர் கருணாநிதிக்கு காங்கிரஸ் கட்சி வைத்த முதல் செக் ராகுல் காந்தி மூலமாக வந்தது. ராகுல் காந்தி வருகைக்கு முன்பு வரை, எந்த காங்கிரஸ் தலைவர் சென்னைக்கு வந்தாலும் சத்தியமூர்த்தி பவனுக்கு போகிறாரோ இல்லையோ, முதல் கோபாலபுரம் சென்று முதல்வர் கருணாநிதியை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.

வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் சென்னைக்கு வந்து அவ்வப்போது கருணாநிதியை சந்திப்பது ஒரு சம்பிராதயமாகவே இருந்தது. இதை அப்போது திமுக கூட்டணியில் இருந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸே எல்லோரும் கருணாநிதியைத்தான் போய் போய் சந்திக்கிறார்கள் என்று புலம்பும் அளவுக்கு அப்போது கருணாநிதியின் மதிப்பு உயரத்தில் இருந்தது.

ஆனால் ராகுல் காந்தி தமிழகத்தில் 3 நாள் முகாமிட்டு வலம் வந்தார். சென்னையில் கிட்டத்தட்ட ஒன்றரை நாள் இருந்தார். ஆனால் ஒப்புக்குக் கூட அவர் முதல்வரைப் பார்க்கவில்லை. குறைந்தபட்சம் தொலைபேசியில் கூட பேசவில்லை.

சமீபத்தில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் சென்னைக்கு வந்தார். சத்தியமூர்த்தி பவனுக்குச் சென்றார். திமுக- காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருப்பதாக பேட்டி அளித்தார். ஆனால் முதல்வரை அவரும் சந்திக்கவில்லை.

இதற்கு முத்தாய்ப்பாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்குச் சென்றார். டெல்லியிலிருந்தே அவரால் கொழும்பு சென்றிருக்க முடியும். ஆனாலும் சென்னை வந்து அங்கிருந்து கொழும்பு சென்றார். வந்தவர் விமான நிலையத்தில் தங்கினார். அந்த சமயத்தில் அவரை போய் திமுக முக்கியஸ்தரும், உயர் கல்வி அமைச்சருமான பொன்முடி போய் பார்த்தார்.

ஆனால் பிரணாப் முகர்ஜி கருணாநிதியை சந்திக்கவில்லை. குறைந்தபட்சம் போனில் கூட பேசவில்லை.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் எந்த நடவடிக்கை எடுத்தாலும், மத்திய அரசு [^] எந்த நடவடிக்கை எடுத்தாலும் கருணாநிதியிடம் ஆலோசனை கலக்கத் தவறுவதில்லை.

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, இலங்கை தொடர்பான எந்த விவகாரமாக இருந்தாலும் மெனக்கெட்டு கருணாநிதியை பார்க்க யாரையாவது அனுப்பி வைப்பார்கள் பிரதமரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும்.

எஸ்.எஸ்.மேனனும், பிரணாப் முகர்ஜியும் இலங்கை விவகாரம் [^] தொடர்பாக பலமுறை சென்னை வந்து கருணாநிதியை சந்தித்துள்ளனர்.

ஒன்று இலங்கைக்குப் போவதற்கு முன்பு சந்திப்பார்கள். அல்லது இலங்கை போய் விட்டு வந்த பின்னர் யாரையாவது அனுப்பி விளக்குவார்கள்.

ஆனால் சமீபத்திய பிரணாபின் இலங்கைப் பயணத்தில் கருணாநிதி கிட்டத்தட்ட இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தில் பிரணாபை போய்ச் சந்தித்த பொன்முடி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சம்பிரதாய நிமித்தமாகவே பிரணாப் முகர்ஜியை வரவேற்க வந்தேன். மற்றபடி முதல்வர் கருணாநிதியிடமிரு்நது பிரணாபுக்கு எந்த செய்தியும், கடிதமும் இல்லை என்று தெரிவித்தார். மேலும், இலங்கை பயணத்திற்குப் பின்னர் கருணாநிதியை பிரணாப் தொடர்பு கொண்டு பேசக் கூடும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆனால் நேற்றே டெல்லி திரும்பி விட்ட பிரணாப் முகர்ஜி [^] இதுவரை முதல்வரைத் தொடர்பு கொண்டதாகத் தெரியவில்லை.

காங்கிரஸ் மேலிடம் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது திமுகவையும், முதல்வர் கருணாநிதியையும், ஏன், தமிழகத்தையும் கூட அது புறம் தள்ளத் தொடங்கி விட்டதோ என்றுதான் யோசிக்கத் தோன்றுவதாக விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதேபோல தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மத்தியிலும் கூட திமுகவுக்கு எதிரான வெறுப்புணர்வு நாளுக்கு நாள் வலுவடையத் தொடங்கியுள்ளது.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சமீப காலமாக மிகக் கடுமையாக திமுகவைத் தாக்கிப் பேசத் தொடங்கியுள்ளார். முன்பெல்லாம் இப்படிப் பேசினால் படு கோபமாக காங்கிரஸ் மேலிடத்தை திமுக தொடர்பு கொள்ளும், காங்கிரஸ் மேலிடமும் இளங்கோவனை சற்று தட்டி வைக்கும்.

ஆனால் இந்த முறை திமுக தரப்பிலிருந்து பலத்த அமைதியே பதிலாக வருகிறது. காங்கிரஸ் மேலிடமும் இளங்கோவனை அமைதிப்படுத்த முயல்வதாகத் தெரியவில்லை.

சென்னையில் திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர்கள் பலரும் திமுகவை கிட்டத்தட்ட எச்சரிக்கும் வகையிலேயே பேசினார்.

காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் சுதர்சனம் பொத்தாம் பொதுவாக காங்கிரஸ் மீண்டும் தமிழகத்தில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்று பேசி வைத்தார்.

போளூர் எம்.எல்.ஏ. விஜயக்குமார் படு பகிரங்கமாக, முதல்வர் கருணாநிதியை ராகுல் காந்தி [^] சந்திக்காதது பாராட்டுக்குரிய விஷயம். அவரது இந்த செயல் ஒட்டுமொத்த காங்கிரஸாரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதாக அமைந்தது என்று கூறி திமுகவையும், கருணாநிதியையும் மொத்தமாக அவமானப்படுத்தியுள்ளார்.

ஆனால் கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவோ எதுவும் பேசவில்லை. அவருக்கு சென்னையில் சுயநிதி பொறியியல் கல்லூரி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படி காங்கிரஸ் தரப்பு தொடர்ந்து முதல்வரையும், திமுகவையும் சீண்டி வரும் நிலையில் நேற்று நடந்த முக்தா சீனிவாசன் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி, திமுக- காங்கிரஸ் கூட்டணி நீடித்தால்தான் நாட்டுக்கு நல்லது, தமிழகத்திற்கு நல்லது. திமுக, காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது, இது நீடிக்கும் என்று பேசியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி உள்ளுக்குள் பூகம்பங்கள், சுனாமிகள் சுழன்றடித்துக் கொண்டிருந்தாலும் வெளியில் அமைதி தவழ்வது போல இரு கட்சிகளும் காட்டிக் கொண்டிருக்கின்றன என்பதே உண்மை. எதற்காக இந்த அமைதி, எதுவரை இந்த அமைதி என்பதுதான் மி்ல்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

No comments:

Post a Comment