சென்னை: அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், பணியில் இருக்கும்போது செல்போன்களை எடுத்துச் செல்லவும், பயன்படுத்தவும் அரசு தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் போக்குவரத்துத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் பேருந்தை ஓட்டிக்கொண்டே செல்போனில் பேசுவதாகவும், அதனால் பேருந்துகள் விபத்துக்களில் சிக்க நேரிடுவதாகவும் அரசின் கவனத்துக்கு பல புகார்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே, அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் பணியில் இருக்கும்போது செல்போனை எடுத்துச்செல்லக்கூடாது.
பஸ் டிரைவர்கள் பணியின்போது செல்போனை பயன்படுத்துகிறார்களா என்பதை பேருந்து பரிசோதகர்கள் கண்காணிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர்களும் அரசின் உத்தரவினை முழுமையாக நடைமுறைப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பேருந்தை ஓட்டுனர்கள் இயக்க செல்லும் முன்பு அவர்கள் செல்போனை உடன் எடுத்துச் செல்லாதவாறு போக்குவரத்து மேற்பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்க அனைத்து போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பயணிகள் பாதுகாப்பு கருதியும் மற்றும் அனைவருடைய பாதுகாப்பை முன்னிட்டும் ஓட்டுனர்கள் நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பணியின்போது செல்போனை எடுத்துச்செல்லும் ஓட்டுனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் இந்த தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.
Source: thatstamil.in
No comments:
Post a Comment