பொங்கல் பண்டிகையை தொடர்ந்து வரும் 3வது நாள் காணும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. தை பிறந்த மகிழ்ச்சியை உறவினர்கள், நண்பர்களுடன் பரிமாறிக் கொள்வதற்காக தமிழர்கள் பாரம்பரியமாக இதைக் கொண்டாடி வருகிறார்கள். பெற்றோர், வயதில் மூத்தவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவது இந்நாளின் முக்கிய அம்சமாகும்.
காணும் பொங்கல் தினத்தை முன்னிட்டு காவிரிக் கரையோர நகரங்கள், கிராமங்களில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்தனர். நீலகிரியில் உள்ள சிம்ஸ், தாவரவியல் பூங்கா, மேட்டூர் அணைப் பூங்கா, முக்கிய நகரங்களில் உள்ள பூங்காக்கள், மெரினா கடற்கரை ஆகியவற்றில் மக்கள் வெள்ளம் அலைமோதியது.
சென்னை நகர மக்களின் சுவாசக் காற்றாக விளங்கும் மெரினா கடற்கரையில் தினமும் மாலையில் குவியும் மக்கள் கூட்டத்தையே கட்டுப்படுத்த முடிவதில்லை. விடுமுறை நாளில் கூட்டம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும். இன்று காணும் பொங்கல் தினம் என்பதால் மெரினா மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. மதியம் 3 மணிக்குப் பிறகு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் இருந்தது.
இதனால் மெரினா கடற்கரையில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சிறு வியாபாரிகளுக்கு இந்தக் காணும் பொங்கல் பணப்பொங்கலாக இருந்தது. அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க 5,000 காவலர்கள் மெரினாவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
கடலில் குளிக்கவும், கட்டு மரங்களில் கடலுக்குள் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. 8 குதிரைப்படை வீரர்கள், 35 நீச்சல் வீரர்களும், 4 படகுகளும் பாதுகாப்புக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.
Source:webdunia
No comments:
Post a Comment