Thursday, December 31, 2009

இந்தியாவில் தாக்கப்படலாம்-அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

வாஷிங்டன்: இந்தியாவில் அமெரிக்க குடிமக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக தெலுங்கானாவில் நடந்து வரும் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு தீவிரவாதிகள் அமெரிக்கர்களைத் தாக்கலாம். எனவே இந்தியாவுக்கு செல்லும்போது கவனத்துடன் இருக்குமாறு அமெரிக்க மக்களுக்கு அந்த நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏதாவது ஒரு நாட்டில் லேசான பிரச்சினை என்றாலும் கூட அந்த நாட்டுக்குப் போக வேண்டாம் எனக் கூறுவது அமெரிக்காவின் வழக்கம்.

அந்த அடிப்படையில் தற்போது ஆந்திராவில் தெலுங்கானா பிரச்சினை பெரிதாகி வருவதைத் தொடர்ந்து ஆந்திராவுக்குப் போக வேண்டாம் என சமீபத்தில் தனது குடிமக்களுக்கு அது அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் இந்தியாவுக்குப் போகும்போது கவனத்துடன் இருக்குமாறு அமெரிக்க குடிமக்களுக்கு ஒபாமா அரசு புது எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மிகக் குறுகிய காலத்தில் அமெரிக்க அரசு விடுத்துள்ள 3வது சுற்றுலா அட்வைசரி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கைச் செய்தியில், இந்தியாவில் அமெரிக்க குடிமக்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு வருவது குறித்து அமெரிக்க அரசுக்கு தொடர்ந்து தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

தீவரவாதிகளும், அவர்களது அனுதாபிகளும், அமெரிக்கர்களையும், மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களையும் சுற்றுலாவுக்கு வரும்போது தாக்கும் சம்பவங்கள் முன்பே நடந்துள்ளன.

தற்போது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் தனி மாநிலம் கோரி பெரும் போராட்டம் நடந்து வருகிறது. இதை தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகமா பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.

எனவே ஆந்திராவுக்குப் போவதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும். இந்திய பயணத்தையும் மறு பரிசீலனை செய்வது நல்லது. அப்படியே போனாலும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

தற்கொலை படை தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளன.
மும்பை பாணியில் தாக்குதல் நடத்ததிட்டமிட்டுள்ளனர். எனவே, இந்தியாவில் இருக்கும் அமெரிக்கர்கள் பாதுகாப்புடன் பயணம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை ஜனவரி 31ம் தேதி வரை அமலில் இருக்குமாம்.

இந்தியாவில் உள்ள முக்கிய இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரென்ட்டுகள், பொழுது போக்கு இடங்கள் உள்ளிட்டவற்றுக்குப் போவதற்கு முன்பு உள்ளூரில் (இந்தியாவில், மாநிலங்களில்) வெளியிடப்படும் காவல்துறை எச்சரிக்கை செய்திகளைப் பார்த்துக் கொண்டு பின்னர் செல்ல வேண்டும் எனவும் அமெரிக்க அரசு தனது குடிமக்களை எச்சரித்துள்ளது.

Source: thatstamil.in

No comments:

Post a Comment