சென்னை & நெல்லை: சென்னையிலும், நெல்லையிலும் மக்களை முடக்கிப் போடும் மர்மக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதில் உற்பத்தியாகும் வகை கொசுக்கள் மூலம் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலின் பாதிப்பு நெல்லை மாவட்டத்தில் அதிகம் உள்ளது.
உடல் வலி, தலைவலி, சோர்வு, மூட்டு இணைப்புகளில் வீக்கம், தொடர் காய்ச்சல் என்று வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட சிக்குன்குனியாவைப் போல இது உள்ளது.
ஏற்கனவே மதுரை உள்ளிட்ட பகுதிகளில் சிக்குன்குனியா மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறது.
தற்போது நெல்லைப் பகுதியில் பரவி வரும் இந்த வைரஸ் காய்ச்சல் ஒரு வாரத்திற்கு படாதபாடு படுத்தி விடுவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்
இவ்வாறு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்க சுகாதாரத் துறையும் களம் இறங்கியுள்ளது. வீடு வீடாக சென்று கொசு மருந்துகளை தெளித்து கொசுக்கள் உற்பத்தி செய்யப்படுவதை தடுத்து வருகிறது. ஆனால் மேலப்பாளையம் உள்ளிட்ட சில பகுதிகளில் சுகாதார சீர்கேடு காரணமாக அதிகளவு மக்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஆங்காங்கே ஏற்படும் உயிர் பலிகள் வைரஸ் காய்ச்சல் குறித்த பீதியை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது. ஆனால் இந்த காய்ச்சல் உயிர்களை காவு வாங்க வாய்ப்பில்லை என்று சுகாதார துரையினரின் கூறி வருகின்றனர். காய்ச்சலை கட்டுபடுத்த சுகாதார துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
சென்னையிலும்...
இதேபோல சென்னையிலும் இந்த மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் தாக்கப்பட்டவர்களால் நடமாடக் கூட முடியாத அளவுக்கு முடக்கிப் போட்டு விடுகிறது.
சிக்குன் குனியா காய்ச்சல் பரவி பொதுமக்களை எப்படி வாட்டி எடுத்ததோ, அதேபோல தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சலாலும் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகிறார்கள். மூட்டு வலியில் தொடங்கி கை விரல்கள், கழுத்து, முதுகு தண்டு என உடலின் அத்தனை பாகங்களிலும் அடித்து நொறுக்கி போட்டது போல ரணம் ஏற்படுகிறது.
இதனால் வயதானவர்களும், குழந்தைகளும் வலி தாங்க முடியாமல் துடித்துப் போய் விடுகின்றனர்.
வீட்டில் யாராவது ஒருவருக்கு வந்து விட்டால் போதும், அவர் மூலமாக வீட்டில் உள்ள மற்றவர்களையும் இது தாக்கி விடுகிறது.
இந்த மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளை நாடி ஓடுகிறார்கள். வழக்கமாக தொற்று நோய்கள் படு வேகமாக பரவும் வட சென்னையில்தான் தற்போது இந்த மர்மக் காய்ச்சலும் அதி வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.
கொடுங்கையூர், வியாசர்பாடி, முத்தமிழ் நகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இந்த வைரஸ் காய்ச்சல் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தலைநகரையும், நெல்லையாயும் பாடாய்ப்படுத்தி வரும் இந்தக் காய்ச்சலைத் தடுக்கவும், இதன் பரவலை ஒடுக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசு பகிரங்கமான, வெளிப்படையான முறையில் நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சிக்குன்குனியாவை விட மோசமான பாதிப்புகளை இந்தக் காய்ச்சல் ஏற்படுத்தி விடும் என்று மக்கள் கருதுகிறார்கள்.
source:thatstamil.in
No comments:
Post a Comment