மைசூர்: கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான விஷ்ணுவர்தன் புதன்கிழமை அதிகாலை காலமானார்.
மைசூரில் தனது வீட்டில் அதிகாலை சுமார் 2.30 மணிக்கு விஷ்ணுவர்தனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சுமார் அதிகாலை 3 மணிக்கு விஷ்ணுவர்தனின் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து அவரது உடல் பெங்களூர் கொண்டு வரப்பட்டது.
விஷ்ணுவர்தனின் மரணம், கர்நாடகாவில் அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டார்.
விஷ்ணுவர்தனின் மனைவியும், நடிகையுமான பாரதி மற்றும் வளர்ப்பு மகள்கள் கீர்த்தி, சந்தனா ஆகியோருக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆறுதல் கூறிய வண்ணம் உள்ளனர்.
வம்சவிருக்ஷா படத்துக்காக தேசிய விருது பெற்ற விஷ்ணுவர்த்தன் விடுதலை, ஸ்ரீராகவேந்திரா உள்பட சில படங்களில் ரஜினியுடன் நடித்துள்ளார்.
லட்சுமி இயக்கிய மழலை பட்டாளம் தமிழ் படத்தில் இவர் தான் கதாநாயகனாக நடித்தார்.
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஷ்ணுவர்த்தன் வித்தியாசமான பரிணாமங்களை வெளிப்படுத்தியவர்.
விஷ்ணுவர்த்தன் கடைசியாக நடித்து முடித்த படம் ஆப்தரக்ஷா. இது சந்திரமுகியின் 2ம் பாகமாகும். இந்தப் படத்தை பி. வாசு இயக்கினார். அடுத்த மாதம் இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
பெங்களூரில் ஜெயநகர் 4வது பிளாக்கில் உள்ள அவரது இல்லத்தில் விஷ்ணுவர்தனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
ஏராளமான ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் குவிந்ததால் அவரது உடல் ஊர்வலமாக பசவனகுடி நேசனல் கிரவுண்டுக்கு சாம்ராஜ் நகர் வழியாக ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
போலீஸ் துப்பாக்கிச் சூடு:
அங்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களில் ஒரு பிரிவினர் வன்முறையில் ஈடுபட்டதால் போலீசார் வானை நோக்கி 20 ரவுண்டுகள் சுட்டு கூட்டத்தைக் கலைத்தனர். பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மாலை மைசூர் ரோடு அருகே உள்ள உத்தரஹள்ளி அபிமான் ஸ்டுடியோவில் அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடந்தது.
பெங்களூரில் பதற்றம்:
விஷ்ணுவர்தன் மறைவை அடு்த்து, பெங்களூரின் பல பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. ஜெயநகர், சாம்ராஜ்நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.
இதையடுத்து அந்தப் பகுதிகளிலும் பனசங்கரியிலும் கடைகள், வர்த்தக வளாகங்கள் மூடப்பட்டன. காந்தி பஜார் பகுதியில் ஐஎன்ஜி வைஸ்யா வங்கியின் ஏடிஎம் அடித்து நொறுக்கப்பட்டது.
திரைப்படங்கள் ரத்து:
இந் நிலையில் கர்நாடகம் முழுவதும் திரையரங்குகளில் இன்று காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு படப்பிடிப்புகளும் ரத்தாகியுள்ளன.
விஷ்ணுவர்தன் ரசிகர் தற்கொலை:
இந் நிலையில் விஷ்ணுவர்தன் மரணமடைந்த துக்கத்தில் அதிகமாகக் குடித்த வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரை காப்பாற்றப் போன நண்பரும் உயிரிழந்தார்.
மைசூர் மாவட்டம் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சோமண்ணா (23), விஷ்ணுவர்தனின் தீவிர ரசிகர். இன்று காலை விஷ்ணுவர்தன் மரணமடைந்தார் என்ற செய்தியை கேட்டவுடன் மனம் உடைந்த சோமண்ணா அளவுக்கதிகமாக மதுபானம் குடித்துள்ளார்.
இந் நிலையில் திடீரென வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்துவிட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரின் நண்பர் குண்ணய்யா (28) சோமண்ணாவை காப்பாற்ற பின்னாளேயே கிணற்றில் குதித்துள்ளார். ஆனால் இருவரும் வெளியே வரவில்லை. தகவலறிந்து போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டனர்.
Source: thatstamil.in
No comments:
Post a Comment