சென்னை: 'சென்னை சங்கமம்' கலைவிழா சென்னையில் வரும் ஜனவரி 10ம் தேதி துவங்கி ஒரு வாரம் நடைபெறும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கனிமொழி அறிவித்துள்ளார்.
'சென்னை சங்கமம்' ஒருங்கிணைப்பாளரும், எம்.பி.யமான கவிஞர் கனிமொழி இதுகுறித்து தெரிவித்ததாவது:
தமிழ் மையமும், தமிழக அரசு சுற்றுலா வளர்ச்சி-பண்பாட்டுத் துறையும் இணைந்து வழங்கும் சென்னை சங்கமம் 4ம் ஆண்டு கலைவிழாவின் தொடக்க விழா சென்னை தீவுத்திடலில் 10ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.
முதல்வர் கருணாநிதி விழாவை தொடங்கி வைக்கிறார். விழாவில், 16 கலைவடிவங்களை இணைத்து ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் தலைப்பான `பிறப்பொக்கும்' என்பதையொட்டியே சங்கமம் தொடக்க விழாவும் அமைகிறது.
ஜனவரி 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை சென்னை சங்கமம் கலை விழா பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, மெரினா லேடி வெலிங்டன் கல்லூரி அரங்கு, தீவுத்திடல் அரங்கு, மைலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்கா உட்பட 17 இடங்களில் மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடக்கிறது.
கடந்த ஆண்டு தியாகராய நகர் வெங்கட் நாராயணா சாலையில் விடிய, விடிய இசை, நடனம் போன்ற கொண்டாட்டம் நடந்ததைப் போல இந்த ஆண்டு அண்ணாநகர் பகுதியிலும் நடைபெறும்.
இந்த ஆண்டு சென்னை சங்கமம் கலைவிழாவில் புதிதாக வர்த்தக நிறுவனங்கள், கல்லூரிகளுக்கு இடையேயான நாட்டுப்புற நடனப் போட்டி எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெறும். நடனப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகளின் நடன நிகழ்ச்சிகள் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்.
சங்கமம் விழாவில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளான பொம்மலாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், மாட ஆட்டம், கோலாட்டம், புலி ஆட்டம், ஒக்கிலி ஆட்டம், காவடி ஆட்டம், பறை ஆட்டம், கிழவன்-கிழவி ஆட்டம், களியாட்டம், கள்ளி ஆட்டம், களியலாட்டம், கை சிலம்பாட்டம், சிக்காட்டம், சக்கைக்குச்சி ஆட்டம், ஆழியாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
கடந்த ஆண்டு போலவே திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, மணப்பாறை முறுக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், திண்டுக்கல் வேணு பிரியாணி, பள்ளிப்பாளையம் சிக்கன், காரைக்குடி இட்லி, ஜிகர்தண்டா போன்ற தல உணவு வகைகளும் சங்கமம் விழாவில் கிடைக்கும்.
சென்னை சங்கமம் விழாவின் ஒருபகுதியாக ஜனவரி 12ம் முதல் 16ம் தேதி வரை பிலிம்சேம்பரில் இலக்கிய நிகழ்ச்சி நடக்கிறது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் ஜெயகாந்தன் கலந்துகொள்கின்றனர்.
'நம்ம் ஈரோடு, திருப்பூர் கூடல்':
சென்னை சங்கமம் போல ஈரோட்டில் ஜனவரி 2, 3, 4 தேதிகளில் `நம்ம ஈரோடு' என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. திருப்பூரில் ஜனவரி 29, 30, 31 தேதிகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு `திருப்பூர் கூடல்' என்று பெயர் வைத்துள்ளனர்.
இதுபோல திண்டுக்கல்லில் ஜனவரி 26 முதல் 30ம் தேதி வரை கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விருதுநகரிலும் கலை நிகழ்ச்சி நடத்தப் போவதாக சொல்லியிருக்கிறார்கள் என்று கனிமொழி கூறினார்.
Source:thatstamil.in
No comments:
Post a Comment