Wednesday, March 30, 2011

குள்ளநரிக் கூட்டம் - விமர்சனம்




சிம்பிளான கதை... அழகான காட்சியமைப்புகள்... படம் நெடுக இழையோடும் மெல்லிய காதல், கிச்சகிச்சு மூட்டும் நகைச்சுவை என இரண்டரை மணி நேரம் போனதே தெரியவில்லை.

வேலை வெட்டி இல்லாத எம்பிஏ பட்டதாரி விஷ்ணு. 1500 ரூபாய் கொடுத்து செல்போனுக்கு டாப்-அப் பண்ணச் சொல்கிறார் அப்பா. ஆனால் அதை தப்பான நம்பருக்குப் பண்ணிவிட, வீட்டுக்குப் போக முடியாமல், அந்த நம்பரைத் துரத்தி பணத்தை வசூல் பண்ண முயல்கிறார் விஷ்ணு. அந்த நம்பருக்குச் சொந்தக்காரர் ரம்யா நம்பீசன். போலீஸ்காரர் மகள்.

இந்த துரத்தல் ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. காதலியையே கரம் பிடிக்கலாம் என்று அடுத்த அடி எடுத்து வைக்க, ரம்யாவின் அப்பாவோ தனக்கு வரும் மாப்பிள்ளை போலீசாக இருந்தால்தான் கல்யாணம் என்று நிபந்தனை போடுகிறார். விஷ்ணுவின் அப்பாவுக்கோ போலீஸ் என்றாலே எட்டிக் காய் (மழைக்குக் கூட போலீஸ் ஸ்டேஷன் பக்கம் ஒதுங்கக் கூடாது என்பது இவர் பாலிசி!). அப்பாவைச் சமாளித்து போலீஸ் ஆபீஸர் ஆகிறாரா, ரம்யாவின் கைப் பிடிக்கிறாரா என்பது மீதிக் கதை.

க்ளைமாக்ஸும், அதில் விஷ்ணு டிஜிபியிடன் வைக்கும் கோரிக்கையும் கொஞ்சமல்ல, ரொம்பவே நாடகத்தனமானவை. என்றாலும், இந்தக் கதைக்கு வேறு யதார்த்த க்ளைமாக்ஸ் எடுபட்டிருக்குமா என்பதையும் யோசிக்கத்தான் வேண்டும்.

வெண்ணிலா கபடிக் குழுவில் அறிமுகமான விஷ்ணுவின் அடுத்த படம் இது. யதார்த்த நடித்திருக்கிறார். குறிப்பாக அந்த போலீஸ் தேர்வு தொடர்பான காட்சிகளில் ஒரிஜினலாகச் செய்திருக்கிறார் (இவரது அப்பா பெரிய போலீஸ் அதிகாரி என்பதால் கிடைத்த அனுபவம் போலிருக்கிறது!)

ரம்யா நம்பீஸன் தனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பை அழகாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். 1500 ரூபாயை அவர் திருப்பித் தரும் விதம் கவிதை. அந்தக் காட்சிகளில் மனதைக் கவர்கிறார்.

ஹீரோவின் தாய் தந்தை அண்ணி அண்ணன் பாத்திரங்களில் வருபவர்கள் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

சூரி, அப்புக்குட்டி, ஐயப்பன் ஆகியோரின் இயல்பான நகைச்சுவை இரண்டாவது பாதியில் ஏற்படும் தொய்வை ஓரளவு சரிகட்டுகிறது.

செல்வகணேஷ் இசையில் விழிகளிலே பாடலும், பின்னணி இசையும் ஓகே. லக்ஷ்மணனின் ஒளிப்பதி பளிச்.

பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லாமல் போனால், ரசிக்க வைக்கிற படம் இது. சிம்பிளாக இருந்தாலும் ருசியில் 'ரிச்'சான இளநீர் மாதிரி!

Source:Thatstamil

No comments:

Post a Comment