ஆளுங்கட்சி டிவிகளில் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதி என்ற பெயரில் வீண் வதந்தி பரப்புகிறார்கள். இதை அதிமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும் நம்ப வேண்டாம். பிற்பகலில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று அதிமுக அறிவித்துள்ளது.
அதேசமயம், வீண் வதந்திகளை நம்பாதீர்கள். தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்று தேமுதிக கூறியுள்ளது.
அதிமுக, தேமுதிக இடையிலான குழப்பம் உச்சத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மதிமுக விலகி விட்டதால் கூடுதலாக நான்கு தொகுதிகள் தேவை என்று தேமுதிக கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் இவைதான் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் என்று கூறி ஒரு பட்டியல் சில டிவிகளில் இன்று தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிமுகவினர் மத்தியிலும், தேமுதிகவினர் மத்தியிலும் குழப்பம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், அதிமுக சார்பில் ஜெயா டிவியில் ஒரு செய்தி ஒளிபரப்பாகி வருகிறது. அதில், கூட்டணி தொகுதிப் பட்டியல் என்ற பெயரில் ஆளுங்கட்சி டிவிகளில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இதை அதிமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும் நம்ப வேண்டாம்.
அதிமுக வேட்பாளர் பட்டியல் திட்டமிட்டபடி இன்று பிற்பகலில் வெளியாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல தேமுதிகவின் கேப்டன் டிவியிலும் ஒரு டிக்கரை ஓட விட்டுள்ளனர். அதில், தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் உயர் மட்டக் குழுவினருடன் விஜயகாந்த் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். தொகுதிப் பட்டியல் குறித்த வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளின் இந்த அவசரச் செய்தியால் கூட்டணி தொடர்பான குழப்பம் மேலும் அதிகரித்துள்ளதாகவே தெரிகிறது.
அதேசமயம், திமுக சார்பு டிவியான சன் டிவி செய்தி சேனலில் தொடர்ந்து அதிமுக, தேமுதிக கூட்டணிக் குழப்பம் தொடர்பாக செய்திகள் வெளியாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Source:thatstamil
No comments:
Post a Comment