Thursday, January 28, 2010

வசூலில் டைட்டானிக்கை 'மூழ்கடித்த' அவதார்!!

டைட்டானிக் திரைப்படத்தின் 12 ஆண்டுகால வசூல் சாதனையை 6 வாரங்களில் முறியடித்துள்ளது ஜேம்ஸ் கேமரூனின் அவதார்.

1997-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் வெளியான படம் டைட்டானிக். உலகக் காதலர்களின் ஒப்பற்ற திரைக்காவியமாகப் பார்க்கப்பட்ட இந்தப் படம் வசூலிலும் விருதுக் குவிப்பிலும் இணையற்ற சாதனைகளைப் படைத்தது.

1,843.2 மில்லியன் (1.8432 பில்லியன்) டாலர்களைக் குவித்து வசூலில் உலகிலேயே நம்பர் ஒன் படமாகத் திகழ்ந்தது. 11 ஆஸ்கர் விருதுகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளையும் வென்றது டைட்டானிக்.

இந்த 12 ஆண்டுகளில் டைட்டானிக்கின் வசூல் சாதனையை வேறு எந்தப் படத்தாலும் முறியடிக்க முடியாமல் இருந்தது. அந்த சாதனையை மீண்டும் ஜேம்ஸ் கேமரூனே இப்போது முறியடித்துள்ளார்.

அவரது அவதார் திரைப்படம் கடந்த டிசம்பர் 18-ம் தேதி உலகமெங்கும் வெளியானது. திரைப்பட வரலாற்றையே புரட்டிப் போட்டுள்ளது இந்தப் படத்தின் வசூல் சாதனை. இந்தியா உள்பட திரையிட்ட நாடுகளிலெல்லாம் இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் படம் நிச்சயம் டைட்டானிக் வசூலை மிஞ்சிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இத்தனை சீக்கிரம் அந்த சாதனை நிகழும் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

வெளியான 6 வாரங்களுக்குள் டைட்டானிக் 12 ஆண்டு வசூல் சாதனையை முறியடித்துள்ளது அவதார்.

6 வது வார நிலவரப்படி, அவதார் பெற்றுள்ள வசூல் 1,858.6 மில்லியன் டாலர்கள் (1.8586 பில்லியன் டாலர்).

விருதுகளை வெல்வதிலும் டைட்டானிக்கை இந்தப் படம் மிஞ்சி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே ஆஸ்கருக்கு அடுத்த நிலையில் உள்ள கோல்டன் குளோப் விருதுகளில் சிறந்த படம், சிறந்த இயக்குநர் விருதுகளை வென்றுள்ள அவதார், 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Source:thatstamil.in

இன்று ரம்பாவுக்கு நிச்சயதார்த்தம்

நடிகை ரம்பாவுக்கும் கனடா தொழிலதிபர் இந்திரனுக்கும் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது.

சென்னையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்த நிச்சயதார்த்தம் நடக்கிறது.

சர்க்கம் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர், ரம்பா.

சுந்தர புருஷன், உள்ளத்தை அள்ளித்தா, அருணாசலம், நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்து பெரிய ரவுண்டு வந்தார்.

சொந்தப் படம் எடுத்து நஷ்டம் கண்ட அவர், பின்னர் போஜ்புரி படங்களில் நடித்தார்.

இப்போது மீண்டும் தமிழில் சில படங்களில் நடிக்கிறார்.

இந் நிலையில் கனடா நாட்டு நிறுவனம் ஒன்றின் விளம்பரத் தூதராக ஒப்பந்தமான ரம்பா, அந்த நிறுவன அதிபரையே திருமணம் செய்கிறார்.

அந்த தொழிலதிபர் பெயர் இந்திரன். இவர்கள் திருமணம், சென்னையில் வருகிற ஏப்ரல் மாதம் நடக்கிறது.

அதற்கு முன்னதாக திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது.

Source:thatstamil.in

மீண்டும் வேலைக்கு ஆள் சேர்க்கும் சத்யம்!

மும்பை: மகிந்திரா சத்யம் நிறுவனம் 2000 புதிய பணியாளர்களை பணி நியமனம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. புதியவர்கள் மற்றும் அனுபவமிக்கவர்களின் கலவையாக இந்த நியமனம் அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வேலைக்குறைப்புக்கு வழிபார்த்துக் கொண்டிருந்த மகிந்திரா சத்யம் இப்போது புதிய ஆட்களை நியமிப்பது குறித்துப் பேசத் துவங்கிவிட்டது. காரணம், மீட்சிப் பாதையில் செல்லத் துவங்கியுள்ளதாம் இந்த நிறுவனம்.

"நிலைமை முன்பு போல மோசமாக இல்லை. வர்த்தகம் நல்ல நிலைக்குத் திரும்பத் துவங்கிவிட்டது. எதிர்காலம் தெளிவாகத் தெரிகிறது. எனவே இப்போது வருகிற வேலைக்கான ஆர்டர்களைச் சமாளிக்க புதிய பணியாளர் நியமனம் அவசியம். இதை இனியும் தள்ளிப் போடாமல் இப்போதே பணி நியமனங்களைச் செய்யப் போகிறோம்" என்கிறார் மகிந்திரா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர்.

அடுத்த நிதியாண்டிலிருந்து கேம்பஸ் இன்டர்வியூவையும் மீண்டும் தொடங்கப் போவதாக சத்யம் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே 2008ம் ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பலரை தேர்வு செய்தது சத்யம் நிறுவனம். ஆனால் நிதி நெருக்கடி காரணமாக, தாங்கள் அளித்த வேலைவாய்ப்புக் கடிதங்களை அப்படியே விட்டுவிட்டது. இவர்களுக்கு மீண்டும் பணிநியமனம் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் அந்த உயர் அதிகாரி.

இந்நிலையில் சமீபத்தில் 6000 மாணவர்களுக்கு தேர்வு வைத்து, அவர்களில் 3000 பேரைத் தேர்வு செய்து வைத்துள்ளது சத்யம். இவர்களை 50 பேர் கொண்ட குழுக்களாக தேர்வு எழுத வைத்து, தேவையானவர்களை இறுதிப் பட்டியலில் இடம் பெறச் செய்யும் திட்டம் உள்ளதாம்.

Source:thatstamil.in

ராஜபக்சேவை குடும்பத்துடன் கொல்லத் திட்டமிட்டிருந்தார் பொன்சேகா-இலங்கை அரசு பரபரப்பு புகார்

கொழும்பு: ராஜபக்சேவையும், அவரது குடும்பத்தினரையும் கூண்டோடு படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தார் சரத் பொன்சேகா என்று இங்கை பாதுகாப்பு அமைச்சகம் பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வரும் அரசின் தேசிய பாதுகாப்புக்கான மீடியா மையத்தின் இயக்குநர் லட்சுமண் ஹலுகலே இன்று மாலை செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், அதிபரையும், அவரது குடும்பத்தினரையும் கூண்டோடு தீர்த்துக் கட்ட முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி பொன்சேகா திட்டமிட்டிருந்தார். இந்த சதித் திட்டத்தை கொழும்பில் உள்ள இரண்டு ஹோட்டல்களில் வைத்துத் தீட்டியுள்ளனர். இதுதொடர்பான ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன.

கோட்டையில் உள்ள, லேக் ஹவுஸ் சந்திப்பு அல்லது கொழும்பு காலே சாலை ஆகியவற்றில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து அதிபரைக் கொல்ல திட்டம் தீட்டப்பட்டிருந்தது.

இந்த சதித் திட்டத்தில் ராணுவத்தை விட்டு ஓடிப் போன 9 அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. இவர்களைத்தான் நேற்று ராணுவத்தினர், பொன்சேகா தங்கியிருந்த ஹோட்டலில் வைத்துக் கைது செய்தனர்.

இந்த பயங்கர சதித் திட்டம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரும் கைது செய்யப்படுவர் என்றார் ஹலுகலே.

ராஜபக்சே தன்னைக் கொலை செய்ய உத்தரவிட்டுள்ளதாக நேற்று காலையில்தான பொன்சேகா கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று மாலை, பொன்சேகாதான், ராஜபக்சேவை கூண்டோடு கொல்லத் திட்டமிட்டிருந்ததாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்து என்ன நடக்குமோ என்ற பேரச்சம் இப்போது இலங்கையை படு வேகமாக சூழ்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

விரைவில் இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு?:

இந் நிலையில் விரைவில் நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் ராஜபக்சே உத்தரவிடுவார் என்று இலங்கை அமைச்சர் மைத்ரிபாலா சிறீசேனா தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ள சூட்டோடு, நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தி எதிர்க்கட்சிகளை கூண்டோடு காலி செய்து விடும் முகமாகவே நாடாளுமன்றத்தை விரைவில் கலைக்க ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து அமைச்சர் சிறீசேனா கூறுகையில், விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும். இதுதொடர்பான அறிவிப்பை அதிபர் விரைவில் வெளியிடுவார். தேர்தல் தேதி குறித்து இப்போது முடிவாகவில்லை என்றார்.

நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியும் தயாராகி விட்டது. இதுகுறித்து கூட்டணியின் பொதுச் செயலாளரான சுசில் பிரேமஜெயந்தா கூறுகையில், கட்சியின் சார்பிலான வேட்பு மனுக்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த சில வாரங்களில் இந்தப் பணிகள் முடிவடையும் என்றார்.

சுற்றுச்சூழல்துறை அமைச்சர் படாலி ரணவக்க கூறுகையில், நாடாளுமன்றத்தின் ஆயுள்காலம் நீட்டிக்கப்பட மாட்டாது. அப்படி ஒரு திட்டம் அரசிடம் இல்லை என்றார்.

நாடாளுமன்றத்தின் ஆயுள்காலம் ஏப்ரலுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான நடைமுறைகளை அரசு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Source:thatstamil.in